“நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை!” என்று சீமான் காட்டமாக கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவையில் நடைபெற்ற குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய சீமான், “நாங்கள் அனைவரும் இந்தியர்கள். எங்களை மத ரீதியாகப் பிரித்துப் பார்க்காதீர்கள் என்ற உரிமைக் குரலோடு, இஸ்லாமிய மக்கள் அனைவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “என்னிடம் குடியுரிமை சான்று கேட்டால், தான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை என கூறுவேன்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், “ஒவ்வொரு குடிமகனும் இதுபோன்ற ஒரு முடிவை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

குறிப்பாக, “குடியுரிமை சான்று கேட்க வரும் அதிகாரியை, 50 பேர் சேர்ந்து மடக்கி, முதலில் அவரது குடியுரிமை சான்றை காட்டச் சொல்வோம்” என்று சீமான் கூறியபோது, கூட்டத்திலிருந்து பலத்த விசில் சத்தம் மற்றும் கை தட்டல் எழுந்து அடங்குவதற்கு வெகு நேரமானது.

அதேபோல், பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்ததாகக் கூறிய சீமான், பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது, ஆர்.எஸ்.எஸ்.சின் அறிக்கையும், திமுகவின் அறிக்கையும் ஒன்றுபோல் இருந்ததாகக் கடுமையாக விமர்சனம் செய்தார். முக்கியமாக, இந்த விவகாரத்தில்,“காங்கிரஸ் தலைவர் ரத்த ஆறு ஓடும்” என்று அச்சமூட்டியதாகவும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, “நான் எவ்வளவு தான் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகப் பேசினாலும், அவர்கள் எனக்கு வாக்களிப்பதில்லை என்றும் சீமான் கவலையாகப் பேசினார்.

இதனிடையே, “நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை!” என்று சீமான் காட்டமாக பேசியது, சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.