நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி, தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் அளித்த புகாரின் பேரில், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர், இதனை எதிர்த்து, நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. அத்துடன், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தியது.

இதன்படி, கடந்த ஜூன் 23 ஆம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. இந்நிலையில், தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை என்று புதிய குற்றச்சாட்டைச் சுமத்தி, நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக்கோரி, சில உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பின்னர், நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை, நியமித்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

இதனால், அதிருப்தி அடைந்த நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதன் காரணமாக, நடிகர் சங்கத் தேர்தல் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்குகள் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதன்படி, நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தற்போது பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அத்துடன், நடிகர் சங்கத்தேர்தலை மீண்டும் நடத்தவும், நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே நீதிமன்றத்தின் தீர்ப்பால், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், விஷால் ஆகியோர் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.