திருமணத்திற்குப் பிறகு மேலும் 2 கிலோ தங்க நகைகள், 58 கிலோ வெள்ளி பொருட்கள் வரதட்சணையாக கேட்ட மாமியாரைப் பற்றி பெண் வீட்டார் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வரதட்சணை கொடுமை சம்பவங்கள், பின் நாட்களில் மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக கடந்த பல ஆண்டுகளாகக் குறைந்து காணப்பட்டு வந்தன. ஆனாலும், தமிழகத்தில் இங்கு ஒன்றும், அங்கு ஒன்றுமாக ஒரு சில வரதட்சணை சம்பவங்கள் மட்டுமே நடந்து வந்தன.

இந்நிலையில், கோவை செல்வபுரம் அருள் கார்டன் பகுதியைச் சேர்ந்த கல்பனா - ஸ்ரீகாந்த், தம்பதிகள் வசித்து வந்தனர். இந்த தம்பதியினர், கோவை காந்திபுரம் 7 வது வீதியில் பஞ்சரத்தினம் ஜெம்ஸ் என்ற பெயரில் ராசிக்கல் ஜோதிட நிலையம் வைத்து நடத்தி வருகிறார்கள்.

இந்த தம்பதியினரின் மகன் ரித்தீஷ் என்பவருக்கும், சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகள் அன்னப்பூரணி என்ற இளம் பெண்ணுக்க்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில், 2 கிலோ தங்க நகைகளும், 58 கிலோ வெள்ளி பொருட்களும், வைர நகைகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் என பலவகையான பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

திருமணத்திற்குப் பிறகு, அன்னப்பூரணி - ரித்தீஷ் தம்பதியினர் மகிழ்ச்சியாகவே குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால், இந்த மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அடுத்து 3 மாதங்களுக்கு கூட நீடிக்கவில்லை. அவர்களது வாழ்க்கையில் வரதட்சணை என்ற பெயரில் புயல் வீசத் தொடங்கி உள்ளது.

மருமகள் அன்னப்பூரணி குடும்பத்தினர் மிகவும் வசதியானவர்கள் என்பதால், திருமணம் முடிந்து அடுத்த 3 மாதத்தில் கூடுதல் வரதட்சணையாக கார், வீடு, நகை வழங்க வேண்டும் என அன்னபூரணியை அவரது மாமியார் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், மாமியாரின் வரதட்சணை கொடுமை குறித்து அந்த மருமகள் தன் வீட்டில் எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

இதனால், மருமகள் அன்னபூரணிக்கு உடலில் ஏதோ பிரச்சினை இருப்பதாகக் கூறி, அவரை அவரது அம்மா வீடான சென்னைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இப்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மருமகளை சென்னைக்கு அனுப்பி வைத்த அவரது மாமியாரும், கணவனும், அதன் பிறகு மருமகளையும், பெண் வீட்டாரையும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த மே மாதம் 8 ஆம் தேதி அன்னப்பூரணி கோவைக்கு வந்து கணவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, கணவர் ரித்திஷ், அவரது பெற்றோர் கல்பனா - ஸ்ரீகாந்த் ஆகியோர் சேர்ந்து கூடுதல் வரதட்சணை இல்லாமல் இங்கே வரக்கூடாது என்று கூறி, மீண்டும் அவரை அவரது அம்மா வீடான சென்னைக்கே அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அன்னப்பூரணி, “கணவருடன் சேர்ந்து வாழவைக்க கோரி” இளம் பெண் அன்னப்பூரணி கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், காவல் நிலையத்தில் புகாரைப் பெறாமல் போலீசார் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, “கணவருடன் சேர்ந்து வாழவைக்க கோரி” அன்னப்பூரணி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையறிந்த ரித்தீஷ் மற்றும் அவரது பெற்றோர், அன்னப்பூரணிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகின்றது. ஒரு கோடி மதிப்பிலான கார், வீடு ஆகியவை வாங்கி வராவிட்டால் சேர்த்துக்கொள்ள முடியாது என தெரிவிக்கவே அன்னப்பூரணி கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தார்.

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்படாமல் தொடர்ந்து காலதாமதம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த புகார் நடவடிக்கை பற்றி அறிந்த கணவன் ரித்தீஷ் மற்றும் அவரது பெற்றோர், அன்னப்பூரணிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகின்றது. அத்துடன், “ஒரு கோடி மதிப்பிலான கார், வீடு ஆகியவை வாங்கி வராவிட்டால் மருமகளை சேர்த்துக்கொள்ள முடியாது” என்று, அவரது மாமியார் கூறியதாக, மருமகள் அன்னப்பூரணி கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஆனால், புகார் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்ததால், கோவை மகளிர் நீதிமன்றத்தில் அன்னபூரணி வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த மகளிர் “நீதிமன்றம், உடனடியாக புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யவும், எப்.ஐ.ஆர் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும்” ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அதிரடியாக உதிரவிட்டது.

இதன் காரணமாக, கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபா தேவி, இது பற்றி வழக்குப் பதிவு செய்தார். வரதட்சணை கேட்டு மிரட்டியதாகக் கணவர் ரித்தீஷ், அவரது பெற்றோர் கல்பனா, ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், வரதட்சணை கேட்டு துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, இந்நிலையில், வழக்குப்பதிவு செய்த தகவல் பொது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக, சற்று வித்தியாசமாக யோசித்த பெண் வீட்டார், இந்த வரதட்சணை கொடுமை பற்றி, மாப்பிள்ளை வீட்டாரின் ராசிக்கல் ஜோதிட நிலையம் செயல்படும் கோவை பகுதி முழுவதும், பெண்ணின் உறவினர்கள் நோட்டீஸ் அடித்து ஒட்டினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.