மலைப்பாம்பு புள்ளிமானை உயிருடன் விழுங்கியதை நேரில் பார்த்த கிராம மக்கள் அச்சத்தில் உரைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மொரப்பூர் காப்புக் காட்டில் புள்ளிமான், மயில், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், விவசாயி தேவராஜ், வனப்பகுதி ஒட்டி உள்ள பாதையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, உயிர் பயத்தில் மான் சத்தமிட்டுள்ளது. இதனால், பதறிப்போன விவசாயி, சத்தம் கேட்கும் திசையை நோக்கி ஓடியுள்ளார். அப்போது, மிக நீளமான மலைப்பாம்பு ஒன்று, மானைச் சுற்று வளைத்து விழுங்கிக்கொண்டு இருந்தது. இதனால், அந்த விவசாயி அந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த பொதுமக்கள் சத்தம் எழுப்பினர். இதனால், தன் பிடியிலிருந்த மானை, மலைப்பாம்பு விடுவித்தது. ஆனாலும், மான் பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர், மலைப்பாம்பு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது தொடர்பாக விரைந்து வந்த வனத்துறையினர், மலைப்பாம்பைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மலைப்பாம்பு வந்த இடத்தில் அருகிலேயே விவசாய நிலப்பகுதி இருப்பதால், தங்களது உயிர்களுக்கும் ஆபத்து இருப்பதாகக் கிராம மக்கள் தெரிவித்தனர். அத்துடன், மலைப்பாம்பு மானை விழுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.