கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கோவையில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த சச்தோஷ்குமார் தூக்கிச் சென்று கை, கால்களைக் கட்டி வெறித்தீரபாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதனையடுத்து, அந்த சிறுமியின் கழுத்தை நெறித்து, அவன் கொடூரமாகச் சிறுமியைக் கொலை செய்து, அப்பகுதியில் உள்ள புதரில் தூக்கி எரிந்துவிட்டுச் சென்றுவிட்டான்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கோவை நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வந்த இந்த வழக்கில், அனைத்து தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர்.

அதன்படி, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது.

மேலும், குற்றவாளிக்கு தண்டனை விபரங்களைப் பிற்பகல் 3 மணிக்கு மேல் அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சந்தோஷை தவிர்த்து, மற்றொரு நபரின் டி.என்.ஏ.வும் கலந்திருப்பதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், இது குறித்துக் காவல் துறை தரப்பில் எந்த விசாரணையும் நடைபெற வில்லை என்றும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தோஷ் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்ததுள்ளனர். அத்துடன், தண்டனை மிகக் கடுமையாக வழங்கப்படும் என்றும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.