உலகம் முழுவதும் தொடரும் கொரோனா கொடூரத்திற்கு இதுவரை 11 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் என்னும் தொற்று நோயால், உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகள் முழுமைக்கம் பரவி உள்ளது. அதே நேரத்தில், சீனாவில் இந்த நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆனால், மற்ற ஒவ்வொரு நாடும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா தாக்குதலுக்கு இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 793 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை இத்தாலியில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 அயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், இத்தாலியில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 986 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, உலக அளவில் சீனா மற்றும் இத்தாலிக்கு அடுத்தப்படியாக, கொரோனா தாக்குதலுக்கு அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டள்ளது. அமெரிக்காவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல், அந்நாட்டு அரசு கடுமையாக திணறி வருகிறது. இதுவரை கொரோனாவால் அங்கு பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 கடந்துள்ளது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 620 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் இதுவரை 20 ஆயிரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் மட்டும் 394 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் இதுவரை ஆயிரத்து 725 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் இதுவரை 12 ஆயிரத்து 612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் இதுவரை 450 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரானில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் இதுவரை 19 ஆயிரத்து 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் ஆயிரத்து 433 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 733 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு இங்கிலாந்தில் இதுவரை 177 பேர் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் 2 பேர் உயிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக உலக அளவில் கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் இதுவரை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது.

இதனிடையே, சீனாவில் தொடர்ந்து 3 வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என அந்நாடு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.