தமிழகத்தில் 4058 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 33 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த வாரத்தைக் காட்டிலும், கொரோனா என்னும் கொடிய நோய் தற்று சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500, 500 ஆக உயர்ந்து வருகிறது.

இதனிடையே, இன்று அரியலூரில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 34 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், புதிதாக 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 31 நபர்கள் உட்பட, 43 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.

சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து, விழுப்புரம் மாவட்டத்திற்குச் சென்றவர்களில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கோயம்பேடு சந்தை சார்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, ஆலங்குளம் தாலுகா வட்டாட்சியர் பட்டமுத்து அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் கொரோனாவால் 4058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தமிழகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,711லிருந்து 49,570 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,583 லிருந்து 1,697 ஆக அதிகரித்துள்ளது.