தமிழகத்தில் 1683 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 20 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழக அரசு எவ்வளவு தான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும், அதை அனைத்தையும் தாண்டி, கொரோனாவின் கோரப் பிடியில் தமிழக மக்கள் சிச்கி திக்குமுக்காடி வருகின்றனர்.

தமிழகத்திலேயே, அதிக பட்சமாகச் சென்னை மற்றும் கோவை பகுதிகளில் தான் அதிக அளவிலான கொரோனா பாதிப்பு பரவி உள்ளது.

இதனால், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகரங்களில், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மட்டும் அதிக பட்சமாக 405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிக பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் சுமார் 118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், இன்று ஒரே நாளில் கோவையில் போத்தனூரை சேர்ந்த 2 பெண் காவலர்கள் உள்பட மொத்தம் 6 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உறுதி செய்துள்ளார்.

மேலும், கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களுடன் தொடர்பிலிருந்த மற்ற காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, போத்தனூர் காவல் நிலையம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு பணியாற்றி வந்த காவலர்கள், தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தற்காலிகமாக வேறு இடத்தில் சிலநாட்களுக்கு போத்தனூர் காவல்நிலையம் இயங்கும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்திலிருந்த கேன்டீன் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது.பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, இன்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயார் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து 250 பட்டர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், மதுரையில் QR கோர்டு அனுமதிச் சீட்டு வாங்க குவிந்த மக்கள், அதிக அளவில் வந்ததால், யாருமே சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை. இதனால், இன்று வழங்கப்பட்டு வந்த அனுமதிச் சீட்டுப் பணியை, ரத்து செய்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டத்தில் மருந்துக் கடைகள் தவிர, அனைத்து அத்தியாவசிய கடைகளும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களுக்கு மூடப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. அத்துடன், கடலூர் மாவட்டம் முழுவதும், ஞாயிற்றுக்கிழமை அன்று போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் செவிலியர் சென்னை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இப்படியாக, ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் 1683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.