தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 அக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கொரோனோ ஊரடங்கு காரணமாக மதுரையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சித்திரைத் திருவிழா அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்வு மட்டும் நடைபெறுவது குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தாக்கம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் அதிகளவாக ராயபுரம் மண்டலத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது.

முக்கியமாக, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பிய 1 லட்சத்து 2 ஆயிரத்து 842 பேர், நேற்று வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பது குறித்து சென்னை ,கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் ரேப்பிட் டெஸ்ட் கிட் மூலம் இன்று முதல் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ஊரடங்கு உத்தரவால் சென்னையில் மாநகராட்சியில் குப்பை அளவு முற்றிலுமாக குறைந்துள்ளதாக, சென்னையில் மாநகராட்சி தெரிவித்துள்ளது.