இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பீதி கிளப்பி வரும் கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் தன் வீரியத்தை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறது. இதனால், நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள், வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

ஒரு பக்கம் கொரோனா தாக்கம் காரணமாக, நாட்டின் மொத்த பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு 2021 ஆம் ஆண்டு, ஜூலை வரையிலும் வழங்கப்படாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. அது வரையிலும் தற்போது வழங்கப்பட்டு வரும் 17 சதவிகித அகவிலைப்படி எந்த மாற்றமும் இன்றி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

அதேபோல், கொரோனா தொற்றை உறுதி செய்ய நாடு முழுவதும் பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, டெல்லியில் ஆதரவற்றவர்களுக்கு வழங்குவதற்காகக் குடியரசுத் தலைவரின் மனைவி சவிதா கோவிந்த், முகக்கவசங்களை தைத்துக் கொடுத்து வருகிறார்.

இதனிடையே, மும்பையில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக பட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 5649 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இதுவரை அங்க 269 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்தபடியாக, டெல்லியில் தற்போது வரை 2248 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தானில் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,935 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 344 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்துள்ளது. அங்கு, இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர். 141 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆந்திரப்பிரதேசத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 893 ஆக அதிகரித்துள்ள நிலையில், 141 பேர் குணமடைந்துள்ளனர்.

கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 2 ஆம் இடத்திலிருந்த தமிழகம், தற்போது 5 ஆம் இடத்திற்குக் குறைந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டார்.

இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 21,393 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படாத மாவட்டங்கள் 78 ஆக உயர்ந்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “ஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும், மத்திய அரசு 7,500 ரூபாய் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன், “முதல் கட்ட ஊரடங்கால் 12 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், ஒருமைப்பாடு தேவைப்படும் நேரத்தில், பாஜக வெறுப்பு வைரசைப் பரப்புகிறது என்றும் சோனியா காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.