உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47.27 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி வருகிறது.

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் முதல் பரவத்தொடங்கிய நிலையில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கடந்த 4 மாத காலமாகத் தான், அதி வேகமாகப் பரவி வருகிறது. இதனால், அனைத்து உலக நாடுகளும் அவரச நிலையைச் சந்தித்து வருகின்றன.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா மனிதர்களுடன் எப்போதும் இருக்கும் என்றும், கொரோனாவுடன் வாழ மக்கள் பழகிக்கொள்ள வேண்டும் உலக சுகாதார அமைத்துத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,30,348 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85,197 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,813 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோல், அமெரிக்காவில் கொரோனாவிலிருந்து இதுவரை 1,83,892 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும், கொரோனா தாக்கம் காரணமாக, அமெரிக்காவில் சுமார் 3 கோடி பேர் வேலை இழந்துள்ளதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தலா 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு குறைந்த சதவீதமே பதிவாகி உள்ளது. ரஷ்யாவில் இதுவரை 2,42,271 போர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு கொரோனாவுக்க இதுவரை 2212 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் மேலும் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47.27 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,98,059 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,57,735 ஆக உயர்ந்துள்ளது.