உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,82,083 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனா என்னும் ஒற்றை சொல்லுக்கு, உலகமே இன்று அஞ்சி நடுங்குகிறது. சுமார் 200 நாடுகளில் கொரோனாவுக்கு அச்சப்படாதவர்களே இல்லை என்ற நிலை இப்போது வந்துள்ளது.

உலகிலேயே, கொரோனவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகத் திகழ்கிறது உலக வல்லரசாகப் பார்க்கப்படும் அமெரிக்கா. அங்கு, இன்றைய நிலவரப்படி, 6,67,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இத்தாலியில் 22,170 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஸ்பெயினில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 19 ஆயிரத்தைக் கடந்து, 19,315 ஆக அதிகரித்துள்ளது.

பிரான்சில் 17,920 பேரும், இங்கிலாந்தில் 13,729 பேரும் கொரோனாவால் இதுவரை உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை இதுவரை 1 லட்சத்தைத் தாண்டி உள்ளது.

கொரோனா வைரஸ் தோன்றியதாகக் கூறப்படும் சீனாவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆயிரத்து 300யை கடந்துள்ளது. அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 3,300 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 4500 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,82,083 ஆக உயர்ந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1.45 லட்சமாக அதிகரித்துள்ளது.

அதேபோல், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து 5,47,092 பேர் மீண்டு, குணமடைந்துந்த, வீடு திரும்பி உள்ளனர்.