அண்டார்க்டிகாவைத் தவிர 6 கண்டங்களைச் சேர்ந்த 53 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் உருவாகி, இன்று உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்க்கு, இதுவரை 2 ஆயிரத்து 850 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில், சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 744 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், கொரோனா வைரஸ்க்கு சீனாவில் மட்டும் 78 ஆயிரத்து 500 பேருக்கு மேல், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 கண்டங்களைச் சேர்ந்த 53 நாடுகளில் கிட்டத்தட்ட 82 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக, தென் கொரியாவைதான், கொரோனா வைரஸ் அதிகம் தாக்கி உள்ளது. அந்த நாட்டில் மட்டும், சுமார் ஆயிரத்து 766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு அந்த நாட்டில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் சுமார் 650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளும் பீதியில் உரைந்துபோய் உள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், கொரோனா வைரஸ், 20 நாடுகளில் பரவி உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், மெக்கா மற்றும் மதினாவுக்கு வெளிநாடுகளிலிருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ளவேண்டாம் என்று சவூதி அரேபிய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதனால், சென்னையிலிருந்து மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித பயணம் மேற்கொள்ள சென்னை விமான நிலையம் வந்த 200 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நேற்று, திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனிடையே, கொரோனா வைரசை உலக சுகாதார அமைப்பானது, தொற்றுநோயாக அறிவிக்கப் போவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.