தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதிகபட்சமாக ஈரோட்டில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் வேகமாகப் பரவி வந்ததாலும், தமிழகத்தில் அதன் தாக்கம் சற்று குறைந்த அளவே காணப்பட்டு வந்தது.

இதனால், ஊரடங்கைப் பற்றி சிலர் கவலைப்படாமல், தமிழகத்தில் சிலர் சாலைகளில் சுற்றித் திருந்து வந்தார்கள். இப்படியாகத் தமிழகத்தில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றித் திரிந்ததாக சுமார் 54,400 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தற்போது 74 ஆக உயர்ந்தள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் 17 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாகத் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இதில், தமிழக அளவில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக, 2 வது இடத்தில் தமிழகத்தின் தலைநகர் சென்னை இடம் பெற்றுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 22 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வது இடத்தில் சேலம் மாவட்டத்தில் 6 பேரும், 4 வது இடத்தில் மதுரை மாவட்டத்தில் 4 பேரும், 5 வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேரும், 6 வது இடத்தில் விருதுநகர், காஞ்சீபுரம், கோவை, திருப்பூர், தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் கொரோனா முதல் கட்ட பரிசோதனைக்காக, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து சிகிச்சை பெற்றுக் குணமடைந்து உள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் சுமார் 43 ஆயிரத்து 537 பேர், அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, சென்னையில் 4,523 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,780 பேரும், திருச்சி மாவட்டத்தில் 2,622 பேரும், சிவகங்கை மாவட்டத்தில் 2,424 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,348 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,168 பேரும், நாகை மாவட்டத்தில் 2,120 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் 2,110 பேரும், கடலூர் மாவட்டத்தில் 1,634 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 1,495 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 1,479 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1,248 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 1,246 பேரும், மதுரை மாவட்டத்தில் 1,231 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 1,166 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 1,156 பேரும் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, திருத்தணியில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக வதந்தி பரப்பியதாக 2 பேரை, போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.