இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2 வது இடம் பிடித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் சற்று மிதமாகப் பரவ தொடங்கிய கொரோனா, தமிழ்நாட்டில் கொஞ்சம் மெல்லத் தான் எட்டிப்பார்த்தது. ஆனால், பரவ தொடங்கி வேகத்தில், இன்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2 வது இடம் பிடித்துள்ள என்றால், அதை ஜீரணிக்கக் கூட முடியவில்லை.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 309 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2 வது இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடம் பிடித்துள்ளது. 3 வது இடத்தில் கேரளா உள்ளது.

மேலும், தமிழகத்தில் 38 மாவட்டங்களில் சுமார் 26 மாவட்டங்களை கொரோனா வைரஸ் தொற்று ஆக்கிரமித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை புதுப்பேட்டையில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், புதுப்பேட்டையில் உள்ள அனைத்து தெருக்களும் தடுப்புகள் வைத்து மூடி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோல், தமிழகத்தில் தற்போது வீட்டு கண்காணிப்பில் 86 ஆயிரத்து 342 பேர் உள்ளனர். அத்துடன், கடந்த 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை 4 ஆயிரத்து 70 பேர் முடித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.