கோவையில் தன்னுடன் பணியாற்றும் துப்புரவு பெண் தொழிலாளியை, பாஜக பிரமுகர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வரதராஜபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ESI மருத்துவமனையில் ஏராளமான பெண்கள், துப்பரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர், அங்குள்ள பெண்கள் கழிவறையைச் சுத்தம் செய்ய சென்றுள்ளார்.

அப்போது, அதே மருத்துவமனையில் பிளம்பராக பணியாற்றும் ஜோதி என்பவர், அந்த பெண்ணை பின் தொடர்ந்து, பெண்கள் கழிவறைக்குள் சென்றுள்ளார்.

பெண்கள் கழிவறைக்குள் உள்ளே சென்றதும், அங்கு கழிவறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த பெண்ணை, இழுத்து அணைத்து, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால், அந்த பெண், சத்தம் போட்டு கூச்சலிடவே, ஆத்திரமடைந்த ஜோதி, அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கி, காயப்படுத்தி உள்ளார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் பணியாற்றும் சக ஊழியர்கள் ஓடிவந்து, அந்த பெண்ணை மீட்டு அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண் துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு தந்த ஜோதியை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட ஜோதி, பாஜகவின் கோவை மாட்ட SC, ST பிரிவு பொறுப்பாளராகவும், தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கத்தின் கோவை மாட்ட மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறார்.

இதனிடையே, பாஜக பிரமுகர் ஒருவர், தன்னுடன் பணியாற்றும் பெண் துப்புரவு தொழிலாளியை, பெண் கழிவரைக்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம், கோவையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.