4 ஆம் கட்ட ஊரடங்கிற்குப் பின்னர் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக 4 வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 31 ஆம் தேதியுடன், முடிவடைகிறது. 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், அது முடிவடையும் காலத்திற்கு உள்ளாகவே, பல்வேறு பணிகளுக்கும் தளர்வுகள் ஒன்றின் பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பது ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளிப் போகலாம் என்ற தகவல் வெளியானதால், 5 வது முறையாகவும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

அதே நேரத்தில், 4 ஆம் கட்ட ஊரடங்கிற்குப் பின்னர் விதிக்கப்படும் எதிர்கால கட்டுப்பாடுகள் குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன், பள்ளி - கல்லூரிகள் திறப்பு, சர்வதேச விமான போக்குவரத்து ஆகியவை மட்டும் ஜூலை மாதம் வரை மத்திய அரசு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், வரும் 29 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

அப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மாவட்டம் தோறும் உள்ள கொரோனா சூழல் குறித்தும், அவர் கருத்துக்களைக் கேட்டறிகிறார்.

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே, பொது முடக்கம் குறித்து முக்கிய முடிவை முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது அவர்கள் இருக்கும் ஊரிலேயே தேர்வுகள் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்க எந்தவித தடையும் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தற்போது விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.