தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில், 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக” குறிப்பிட்டார்.

“சேலம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், சேலம் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் உள்ள 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும்” கூறினார்.

“தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வேகமாகக் குணமடைந்து வருகின்றனர்" என்றும் முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

“மத்திய அரசுக்கு முன்பே, 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளைத் தமிழகம் ஆர்டர் செய்தது என்றும், தற்போது தமிழகத்திற்கு முதல்கட்டமாக 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்துள்ளதாகவும்” முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, “ விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என்றும், தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

மேலும், “மத்திய அரசு உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும் மக்களின் தேவையை மாநில அரசு பூர்த்தி செய்யும்” என்றும் முதலமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அத்துடன், “எதிர்க்கட்சி தலைவர், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்படுகிறது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.