குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பல்வேறு மாநிலங்களில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது 144 தடை உத்தரவு போடப்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டன.

இதனிடையே, தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் போராட்டத் தீ உச்சத்திலிருந்தபோது, அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. போராட்டம் தீவிரமடைந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டதுடன், தொலைப்பேசி சேவைகளும், இண்டர்நெட் சேவைகளும் முடக்கப்பட்டன. இதனால், கடந்த சில நாட்களாகப் போராட்டத்தின் வேகம் சற்று தணிந்து காணப்பட்டது.

இந்நிலையில், டெல்லியின் சில இடங்களில்குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்ட.ம் நடைபெற்று வருவதால், டெல்லி சீலாம்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால், தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்கள், தொழுகை முடிந்து ஜம்மா மசூதி வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் நடைபெறும் ஜமா மசூதி, ஜாமியா பல்கலைக்கழகம், சீலாம்பூர், ஜோர் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு, ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதனால், டெல்லியில் மீண்டும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.