இன்று ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாயைத் தாண்டி விற்கப்படுவது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

வெங்காயத்தை உரித்தால் மட்டுமல்ல, அதன் விலையைக் கேட்டாளே இப்பொழுதெல்லாம் கண்ணீர் வருகிறது. உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாத வெங்காயத்தின் விலை இன்று 200 ரூபாயைத் தாண்டி உள்ளது.

விளைச்சல் பாதிப்பு மற்றும் தொடர் கனமழை காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டு உள்ளது.

கடந்த ஒரு வாரக் காலமாகச் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை 100 ரூபாய், 150 ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வந்தன.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் சின்ன வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெரிய வெங்காயத்தின் விலை 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயத்தின் விலை 220 ரூபாய்க்கும், பெரிய வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மார்க்கெட்டை ஒப்பிடும்போது திருச்சி, மதுரை உள்ளிட்ட மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை சற்று குறைந்த அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வெங்காயத் தட்டுப்பாடு இன்னும் 2 மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், வாடிக்கையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இதனிடையே, வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.