ஊரடங்கு உத்தரவால் சென்னையில் அதிரடியாக 79 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதையும் மீறி வெளியே வரும் வாகனங்கள் அனைத்தும், பறிமுதல் செய்வதுடன், போலீசார் வழங்கு மற்றும் அபராதங்களையும் போடுவதால், பொதுமக்கள் வெளியே வருவது முற்றிலுமாக குறைந்து காணப்படுகிறது.

இதனிடையே, கடந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், தற்போது மே 3 ஆம் தேதி வரை, 2 வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாக 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளதால், மற்ற இயல்பான நாட்களைக் காட்டிலும், தற்போது இந்த ஊரடங்கு காலத்தில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதிரடியாக 79 சதவீதம் அளவுக்கு குற்றங்கள் குறைந்துள்ளதாக, தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருட்டு சம்பவங்கள் 81 சதவீதம் குறைந்துள்ளன. சாலைப் போக்குவரத்து இறப்பு நிகழ்வுகள் 75 சதவீதம் குறைந்துள்ளன.

அதேபோல், கொள்ளை வழக்கில் 75 சதவீதமும், வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59 சதவீதமும், கொலை சம்பவங்கள் 44 சதவீதமும் குற்றங்கள் அதிரடியாகக் குறைந்துள்ளதாகத் தமிழக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், ஊரடங்கு சட்டம் பிறப்பித்த 25.03.2020 முதல் கடந்த 15.04.2020 வரையிலும்; 5 கொலை, ஒரு வழிப்பறி, 4 கொள்ளை, 12 வீடு புகுந்து திருடிய வழக்குகள், 49 திருட்டு வழக்குகள், 17 அடிதடி வழக்குகள், போக்குவரத்து பிரிவில் 13 இறப்பு வழக்குகள் மற்றும் 56 காய வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் கொரோனாவின் தாக்கம் பயமுறுத்தினாலும், மறுபக்கம் ஊரடங்கால் சென்னையில் அதிரடியாகக் குறைந்த குற்ற நிகழ்வுகளால், பொதுமக்கள் மற்றும் போலீசார் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.