சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 28 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மையம் கொண்டுள்ள கொரோனா என்னும் கொடிய வைரஸ், சென்னை மக்களிடையே தீவிரமாகப் பரவி வருகிறது.

இதன் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி வருகிறது.

இதனிடையே, முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

அத்துடன், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 11 பேர், என இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்தனர்.

மேலும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர், சென்னை கே.எம்.சி. மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் என சென்னையில் இன்று ஒரே நாளில் மொத்தம் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், தமிழகத்திலேயே அதிகபட்சமாகச் சென்னை ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 5,486 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4370 பேரும், தேனாம்பேட்டையில் 4143 பேரும், கோடம்பாக்கத்தில் 3648 பேரும், அண்ணாநகரில் 3431 பேரும், திருவிக நகரில் 3041 பேரும், வளசரவாக்கத்தில் 1444 பேரும், திருவொற்றியூரில் 1258 பேரும், அம்பத்தூரில் 1190 பேரும், அடையாறு பகுதியில் 1931 பேரும், மாதவரம் பகுதியில் 922 பேரும், பெருங்குடியில் 646 பேரும், சோழிங்கநல்லூரில் 639 பேரும், ஆலந்தூரில் 699 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்த இம்மானுவேல் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், மனுவைத் தள்ளுபடி செய்தும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.