சரியாக மாஸ்க் அணியாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் ! சொல்லிக்கொடுக்கும் WHO

சரியாக மாஸ்க் அணியாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் ! சொல்லிக்கொடுக்கும் WHO - Daily news

இந்தியா போன்ற அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட மாநிலங்களில், கொரோனாவை கையாள்வதில் மிகமுக்கியமான சிக்கல், நம்மிடையே அறிகுறிகளே இல்லாத நோயாளிகள்தான் அதிகம் இருக்கின்றனர் என்பதுதான். இருப்பினும்கூட, அறிகுறிகளற்றவர்கள் நோயைப் பரப்பும் விகிதம் குறைவு என்பதால், அதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார் உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் மரியா. அறிகுறிகளற்றவர்கள், `மிகவும் அரிதாக'வே நோயைப் பரப்புவர் என்ற மரியாவின் வார்த்தை, மிக முக்கியமான அப்டேட்டாக மருத்துவத்துறையில் பார்க்கப்பட்டு வந்தது. எந்தளவுக்கு என்றால், `அறிகுறிகளற்றவர் நோயாளிகள், நோயைப் பரப்பவே மாட்டார்கள்' என மருத்துவர்கள் சிலரே முன்னுதாரணம் சொல்லும் அளவுக்கு!

ஆனால், மரியா சொன்ன `மிகவும் அரிது' என்ற வார்த்தைக்கு எதிரான கருத்தொத்த சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் மாத ஆய்வொன்று தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த ஆய்வில், அறிகுறிகளற்ற கொரோனா நோயாளிகளோடு, தொடர்பிலிருக்கும் 44 % பேருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்படும் என அழுத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பகிரப்பட்டதன் தொடர்ச்சியாக, மரியா தற்போது தனது வார்த்தைகளைத் திரும்பப்பெற்றுள்ளார்.

இதுகுறித்து பேசும்போது,

``நான் குறிப்பிட வந்த விஷயம், பொதுவெளியில் தவறுதலாக புரிந்துக்கொள்ளப்பட்டு பகிரப்பட்டுவிட்டது. அறிகுறிகளற்றவர்கள் நோயைப் பரப்ப மாட்டார்கள் என்பதற்கும், ஒரு சில ஆதாரங்கள் ஆய்வுமுடிவுகளாக இருக்கின்றன. இருப்பினும், இவர்களும் கூட 40 % க்கும் மேலே நோயைப் பரப்புவர் என்பதும் தெரியவந்துள்ளது. ஆகவே குழப்பங்களை தவிர்த்துவிட்டு, இவர்களும் நோய்ப்பரப்புவர் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்வோம்" எனக்கூறியுள்ளார்.

கோவிட் - 19 கொரோனா வைரஸ் பரவும் விதத்தில், முக்கியமானது இருமல் - தும்மல் ஆகியவைதான். ஆனால் அறிகுறியவற்றவர்களுக்கு இது இரண்டுமே இருக்காது. அப்படியிருக்கும்போது, அவர்கள் எப்படி நோயைப் பரப்புவர் என நாம் சந்தேகிக்கக்கூடும். அதற்கும் உலக சுகாதார நிறுவனத்தினர் விளக்கம் சொல்லியுள்ளனர். அது,

``கொரோனாவில், சார்ஸ் - மெர்ஸ் போன்று ஏழு வகை வைரஸ்கள் இருக்கின்றன. இதில், புதுவரவாக இருந்ததுதான் கோவிட் - 19 கொரோனா. இது பிற வைரஸ்கள் போல அல்லாமல், ஆழ்ந்து மூச்சுவிட்டால் அதன்வழியாகக்கூட பரவிவிடுகிறது. ஏனெனில், இது தொண்டையின் மேற்புரத்திலேயே நீண்ட காலத்துக்கு இருக்கிறது. அதனால் சற்று அழுத்தமான செய்கையை செய்து மூச்சிரைத்தால்கூட பரவிவிடுகிறது. உதாரணத்துக்கு, ஜிம் சென்று ஆழ்ந்து இழுத்து மூச்சுவிடுவது கூட, அருகிலிருப்போருக்கு பரவும் சூழல் ஏற்படுகிறது. அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்" என்பது.

இந்த மாதிரியான சூழலை தவிர்க்கத்தான், மாஸ்க் அணியவேண்டும் என அறிவுரை சொல்வதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள். இந்த இடத்தில், நடைமுறை சிக்கலொன்று எழும்பியுள்ளது. அது மாஸ்க் அணியும்போது, சிலர் சரியாக மாஸ்க் அணியாமல் இருந்துவிடுகின்றனர். இப்படி செய்வதால், நோய்ப் பரவுதல் தீவிரமாக இருக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. குறிப்பாக இந்தியா போன்ற அறிகுறிளற்றவர்கள் அதிகமாக இருக்கும் நோயாளிகளுள்ள நாட்டில், அதன் காரணமாக மோசமான விளைவுகள் பல ஏற்படும் என்கிறார்கள் அவர்கள்.

இந்த மாதிரியான நடைமுறை சிக்கலை தவிர்க்க, உலக சுகாதார நிறுவணம், மாஸ்க் பயன்பாடு குறித்து, சில முன்னெச்சரிக்கை விஷயங்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் இங்கே.

மாஸ்க் அணிவதற்கான அறிவுரைகள் :

* மாஸ்க் அணியும் முன்னரும், அவிழ்க்கும் முன்னரும் கைகளைக் கழுவ வேண்டும்
* அழுக்கான மாஸ்க்கை உபயோகிக்கக்கூடாது
* மாஸ்க் அணிந்தபின், முகத்துக்கும் மாஸ்க்குக்கும் இடையில் இடைவெளி இருக்கக்கூடாது
* மூக்கு, வாய், கண்ணங்கள் - அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்* மாஸ்க்கின் முன்பகுதியை தொடக்கூடாது
* மாஸ்க்கை கழட்டும்போது, அதை கட்ட உறுதுணையாய் இருந்த கயிறு / நூல் பகுதியை பிடித்துதான் கழற்ற வேண்டும்.
* மீண்டும் பயன்படுத்தப்படுத்தப்போகும் மாஸ்க் என்றால், கழற்றிய மாஸ்க்கை தனியாக ப்ளாஸ்டிக் பையொன்றில் போட்டு வைக்கவும். அந்தப்பை, ஈரமாகவோ - அழுக்காகவோ இருக்கக்கூடாது
* அன்றைக்கு பயன்படுத்திய மாஸ்கை, அன்றே துவைத்து காயவைத்துவிடவும். வெந்நீர் வைத்து துவைப்பத்உ நல்லது.
* மூக்குக்கு கீழ், வாயை மட்டும் மூடும்வகையில் மாஸ்க் அணியக்கூடாது
* மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு இறுக்கமாக மாஸ்க் அணிவது தவறு
* ஒரு மீட்டர் இடைவெளியில் யாரேனும் இருந்தால், அங்கிருக்கும்போது மாஸ்க்கை கழற்றக்கூடாது.

இவற்றை சரியாக பின்பற்றினால், இந்தியாவிலும் கோவிட் - 19 கொரோனாவை வெல்லலாம். விளைவு, நம் கைகளில்தான் இருக்கிறது. உணர்ந்து செயல்படுவோம்.

Leave a Comment