நாடு முழுவதும் பொது முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ், இந்தியாவில் உட்புகுந்துகொண்டதால், அது கொர தாண்டவம் ஆடி வருகிறது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், அதற்கு ஊரடங்கு ஒன்றே தீர்வு என்று கருதி, முதன் முதலாகக் கடந்த மார்ச் 24 ஆம் தேதி அன்று, 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல், அது மேலும் பரவத்தொடங்கியது. இதனையடுத்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி மேற்கொண்ட ஆலோசனையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, 2 வது முறையாக, மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போதும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல், அது தீவிரமாகப் பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி, இந்தியா முழுவதும் சுமார் 37 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1223 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போதும், ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை பல்வேறு மாநில முதலமைச்சர்களும் வலியுறுத்தினர்.

கொரோனா தாக்கம் குறையாத இந்த சூழலில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் ஏதேனும் இருக்குமா என்று எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் தளர்வுகளுக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் ஆரஞ்சு மண்டலங்களில் வாகனப் போக்குவரத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி” வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், “பச்சை மண்டலங்களில் 50 சதவீதம் பேருந்துகளை இயக்கவும், சரக்கு வாகனங்கள் இயங்க தடை விதிக்கக் கூடாது” என்றும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக, வரும் 17 ஆம் தேதி வரை 3 வது முறையாக நாடு முழுவதும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.