இணையத்தில் வைரலான ஆஸ்திரேலியாவின் 9 வயது சிறுவன் குவாடன் பெய்ல்ஸிக்கு, உலகம் முழுவதும் ஆதரவு குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வளர்ச்சி குன்றிய 9 வயது பள்ளி சிறுவன், “சக மாணவர்கள் கிண்டல் செய்ததால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தன்னை கொன்றுவிடுங்கள்” என்றும் அழுது அடம் பிடித்த வீடியோ ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது.

அந்த வீடியோவில் குவாடன் பெய்ல்ஸ், வளர்ச்சி குறைபாட்டால் உயரம் குறைந்து, குள்ளமாக இருப்பது தெரியவந்தது. இதனால் பள்ளியில் தன்னை சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து மனதளவில் தன்னை சித்ரவதை செய்வதாகவும், இதன் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் அந்த சிறுவன் கூறியிருந்தான்.

இந்த வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன் எரிக் ட்ரம்ப், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு சினிமா பிரபலங்கள் குவாடன் பெய்ல்ஸிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், சிறுவன் குவாடன் பெய்ல்ஸிக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், அவரை உற்சாக மூட்டும் வகையிலும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரக்பி விளையாட்டு அணியானது, நேற்று குயின்ஸ்லேண்டில் நடைபெற்ற போட்டியின்போது, மைதானத்துக்குள் நுழையும் ஆல் ஸ்டார் அணியின் வீரர்களை முன்னின்று வழிநடத்திச் செல்ல, குவாடன் பெய்ல்ஸியை அழைத்திருந்தது.

அதன்படி குவாடன் பெய்ல்ஸி, ரக்பி விளையாடும் ஆல் ஸ்டார் அணியின் வீரர்களை, முன்னின்று மைதானத்துக்குள் வழிநடத்தி அழைத்து வந்தார்.

அப்போது, ஒரு கையில் ரக்பி பந்துடனும், மற்றொரு கையில் அந்நாட்டு வீரர் தாம்சனின் விரல்களைப் பற்றியவாறும், குவாடன் பெய்ல்ஸி மைதானத்திற்குள் வந்தார். அப்போது, ரக்பி ரசிகர்கள் கரவொலி எழுப்பி, குவாடன் பெய்ல்ஸியை இன்னும் உற்சாகம் ஊட்டினர்.

மேலும், சிறுவன் குவாடன் பெய்ல்ஸி உடன் பல்வேறு விளையாட்டு வீரர்களும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

அத்துடன், குவாடன் பெய்ல்ஸி போலவே வளர்ச்சி குறைபாடு கொண்ட ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ஒருவர், குவாடன் பெய்ல்ஸிக்காக நிதி திரட்டினார். அதன்படி, இதுவரை சுமார் 3 லட்சம் டாலர் நிதி திரண்டுள்ள நிலையில், அந்த சிறுவனுக்காக உலகம் முழுவதும் ஆதரவு கரங்களும், ஆதரவு குரலும் ஒலிக்கத்தொடங்கி உள்ளன.

இதனிடையே, குவாடன் பெய்ல்ஸி விளையாட்டு வீரர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.