டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட மனைவியை, கொலை செய்து கணவன் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான சித்தலா சின்ன நசரையா, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுவர்தா, சமூக வலைத்தளமான டிக்டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். 

பாட்டு, நடனம் என அந்த வீடியோவில் பல அலப்பறை செய்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாகக் கணவன் கேட்டபோது, இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது. இதனால், கோபப்பட்ட அவர், கணவருடன் சண்டைப்போட்டுவிட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் போய் தங்கி உள்ளார்.

கணவனும் நேரில் சென்று வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர் விடாபிடியாக வர மறுத்துவிட்டார். இதனால், வெறுத்துப்போன சித்தலா சின்ன நசரையா, தன் சகோதர் உடன் சேர்ந்து, சுவர்தாவை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, அவரது உடலை, இருசக்கர வாகனத்திலேயே அங்குள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று, தீயிட்டு எரித்துள்ளார். தீயிட்டு எரிக்கும்போது, அவர் அணிந்திருந்த நகையை அவர்கள் கழற்ற மறந்துவிட்டனர். இதனால், கொலை செய்யப்பட்டது சுவர்தா என்பதை போலீசார் எளிதில் அடையாளம் கண்டுகொண்டனர்.

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையாளிகளைத் தேடி வந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும்போது, சித்தலா சின்ன நசரையா தனது சகோதர் உடன், அந்த வழியாகச் சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அவர்களிடம் தனித்தனியாக நடத்திய போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்து தீ வைத்து எரித்ததை இருவரும் ஒற்றுக்கொண்டனர். பின்னர், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.