முழு ஊரடங்கு அமலுக்கு வருவதையொட்டி, நாளை முதல் 30ம் தேதி வரை சென்னை அண்ணாசாலையில் வழக்கமான வாகன போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கொரோனாவால் பலியான மாம்பலம் காவல் ஆய்வாளர் பால முரளிக்கு, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உட்பட தமிழக போலீசார் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “திருமணம், அவசர மருத்துவ தேவைத் தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது” என்று குறிப்பிட்டார்.

“கடந்த ஊரடங்குகளின் போது பெறப்பட்ட இ-பாஸ்கள் செல்லுபடியாகாது என்றும், இம்முறை புதிதாக இ-பாஸ் பெற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அறிவுரை கூறியும் மக்கள் கேட்காததால் கடந்த ஊரடங்கில் வாகனங்களைப் பறிமுதல் செய்தோம் என்று குறிப்பிட்ட சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், இந்த முறை அனுமதி இல்லாமல் செல்பவர்களின் வாகனங்கள் கண்டிப்பாகப் பறிமுதல் செய்யப்படும்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், “காய்கறி, மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது என்றும், அனைத்து தரப்பினரும் நடந்து சென்ற காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும்” என்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார்.

அதேபோல், “சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்படுவதாகவும், வழக்கமான போக்குவரத்திற்குச் சென்னையில் அனுமதியில்லை” என்றும் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

“பணியாளர்கள் சென்னையிலிருந்து புறநகருக்குச் செல்ல அனுமதி இல்லை என்றும், சென்னையைச் சுற்றி 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

“போலி இ-பாஸ் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வெளியில் செல்பவர்கள் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்” என்றும் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தினார்.

“முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்ட ஏ.கே.விஸ்வநாதன், நோய் தீவிரம் அடைந்துள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்” என்றும் கூறினார்.

“கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கைகளைக் கழுவ சோப்பு தண்ணீர் சானிடைசர் வைக்க வேண்டும் என்றும், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர் கையுறை, கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்” என்றும் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் வலியுறுத்தினார்.

குறிப்பாக, “ சென்னையில் பணி புரியும் பணியாளர்கள் தினசரி சென்னை எல்லையை விட்டு வெளியேற அனுமதியில்லை என்றும், அனுமதிக்கப்பட்ட 33 சதவீதம் ஊழியர்களுக்கு அடையாள அட்டை போதுமானது” என்றும் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.