“நடிகர் அஜித் கண்ணியமானவர், தொழில் பக்தி மிக்கவர் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக, தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் அதிமுக - திமுக கட்சிகள் இல்லாத மூன்றாவதாக ஒரு அணி அமையும் என்றும் பேசப்பட்டு வந்தது.

குறிப்பாக, வரும் சட்ட மன்ற தேர்தலில் ரஜினி - கமல் சேர்ந்து ஒரே அணியில் களமிறங்க வேண்டும் என்று சிலர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “மக்களின் நலனுக்காக, கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்” என்று தெரிவித்தார். அந்த கருத்தினை கமலும், அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்றும் தெரிவித்தார். .

இதனைத்தொடர்ந்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணி முன்பு, ரஜினி - கமல் இணைப்பெல்லாம் தூள் தூளாகும்” என்று விமர்சித்தார்.

குறிப்பாக, “ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள் என்றும், தமிழக அரசியலில் இவர்கள் எடுபடாத சக்திகள் என்றும் விமர்சனம் செய்தார்.

அதேபோல், நடிகர் அஜித் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய ஜெயக்குமார்,
“நடிகர் அஜீத்குமார் கண்ணியமானவர், தொழில் பக்தி மிக்கவர்” என்று புகழாரம் சூட்டினார். மேலும், “அஜித்துக்கு அவருக்குத் தமிழக அரசியல் பற்றிய புரிதல் இருப்பதாகவும், மற்றவர்களுக்கு அது இல்லை” என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தைத் தெரிவித்தார்.