“மகா திருமணம்” திட்டத்தில் விளம்பர தூதர்களாக நடிகர் யஷ் - ராதிகா தம்பதி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக அரசின் சார்பில், அந்த மாநில அறநிலையத்துறை மூலமாக சுமார் ஆயிரம் பேருக்குத் திருமணம் செய்து வைக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த “மகா திருமணம்” வைபவமானது, வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி மற்றும் மே மாதம் 24 ஆம் தேதி என இரு கட்டங்களா நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திருமண வைபவத்தில் கலந்துகொள்ளும் மணப்பெண்ணுக்கு அரசு சார்பில் 8 கிராம் தங்கமும், திருமண ஜோடிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்பட உள்ளதாகவும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆண்டுக்கு 60 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை, வருவாய் வரும் 100 கோயில்களைத் தேர்வு செய்து, அந்த திருத்தலங்களில் கிடைக்கும் வருவாயை வைத்து, இந்த “மகா திருமணம்” திட்டத்தை நிறைவேற்ற அந்த மாநில அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த “மகா திருமணம்” திட்டத்திற்காகச் சிறப்பு விளம்பர தூதர்களாக நடிகர் யஷ் - ராதிகா தம்பதி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதற்கு, அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த திட்டத்தை விளம்பரம் செய்வதற்காக, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இன்போசிஸ் நிறுவனரின் மனைவி சுதா மூர்த்தி, நடிகர் புனீத் ராஜ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கர்நாடக அறநிலையத்துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் புஜாரி கூறியுள்ளார்.