உலக அளவில் சுமார் 6 கோடி பேர் கடும் வறுமையின் கீழ் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதனிடையே, கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் உள்ள மேலும் 6 கோடி மக்கள் கொடிய வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி தற்போது எச்சரித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளால், ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களையும் கொரோனா வீணாக்கி விடும் என்றும், உலக வங்கி கடும் அச்சம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் கூறுகையில், “கொரோனா வைரஸ் ஏற்படுத்திய உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் சுமார் 6 கோ டி மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள்” என்று குறிப்பிட்டார்.

“அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் நாடுகளில் அடுத்த 15 மாதங்களுக்கு 160 பில்லியன் டாலர்கள் செலவிடத் திட்டமிட்டுள்ளதாகவும்” அவர் கூறினார்.

இதனால், கொரோனாவை விரட்டப் போராடிய அரசு, இனி நாட்டு மக்களின் வறுமையையும் விரட்டப் போராட வேண்டிய சூழல் தற்போது உருவாகி உள்ளது. இதன் காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள ஒவ்வொரு நாடுகளும், இந்த வறுமை என்னும் நோயை விரட்டி அடிப்பதும் புதிய சவளாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.