விவசாயிகள் கடன்களுக்குத் தவணை செலுத்துவதிலிருந்து 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் கடன் திட்டங்கள் பற்றி, நேற்று முன் தினம் பிரதமர் மோடி அறிவித்தார்.

இதனையடுத்து, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, தன்னிறைவு இந்தியா திட்டத்தின் 2 ஆம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது வெளியிட்டார்.

அதில், “புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் ஏழைகளையும் மத்திய அரசு மறந்து விடவில்லை என்றும், ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து இடம் பெறும்” என்றும், நிர்மலா சீதாராமன் கூறினார்.

அதன்படி, “நாடு முழுவதும் 3 கோடி விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றும், 4.22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்” நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

“கடன் பெறும் விவசாயிகள் முதல் 3 மாதங்களுக்கு தவணை செலுத்த தேவையில்லை என்றும், நாடு முழுவதும் 3 கோடி விவசாயிகளுக்கு, சுமார் 4.22 லட்சம் கோடி அளவிற்கு கடந்த 3 மாதங்களில் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் கூறினார்.

அத்துடன், “விவசாயிகளின் கடன்களுக்கான வட்டியைச் செலுத்த வேண்டிய அவகாசம் மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றும், இதன் மூலம் விவசாயிகள் கடனை செலுத்துவதற்கான காலம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அதேபோல், “ஊரக கிராமப்புற வங்கிகளுக்கு நபார்டு மூலம் 29,500 கோடி கடனுதவி வழங்கப்படும் என்றும், 25 லட்சம் விவசாயிகளுக்குப் புதிதாகக் கடன் அட்டைகள் வழங்கப்படும்” என்றும், நம்பிக்கை அளித்தார்.

“ஊரக கட்டமைப்புகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு 4200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிட செலவுக்காகப் பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றும், நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

மேலும், “சுய உதவிக்குழுக்கள் மூலம், 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிர்மலா சீதாராமன், 12,000 சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி மத்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும்” நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.