சென்னை ராயபுரத்தில் அதிகபட்சமாக 1,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சற்று குறைந்திருந்தாலும், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதன் வீரியம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி, கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்பு உயிரிழந்துள்ளார்.

சென்னை சூளையைச் சேர்ந்த கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை, அடுத்த சில நிமிடங்களில் இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில், எம்.எல்.ஏ கருணாஸின் தனி பாதுகாப்பு காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னையின் புதிய உச்சமாக ராயபுரத்தில் ஒரே நாளில் 115 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1538 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,192 பேரும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 976 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 869 பேரும், தண்டையார்பேட்டையில் 773 பேரும், அண்ணா நகரில் 662 பேரும், வளசரவாக்கத்தில் 570 பேரும், அடையாறு மண்டலத்தில் 446 பேரும், அம்பத்தூரில் 352 பேரும், திருவொற்றியூர் மண்டலத்தில் 221 பேரும், மாதவரம் மண்டலத்தில் 172 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 109 பேரும், மணலி மண்டலத்தில் 108 பேரும், பெருங்குடியில் 103 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 90 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

அதேபோல், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 60.27 சதவீதம் என்பதும், பெண்கள் 39.71 சதவீதம் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, வடசென்னைக்கு உட்பட்ட ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மாதவரம், மணலி ஆகிய 5 மண்டலங்களில் நேற்று ஒரே நாளில் புதிதாக 229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த 5 மண்டலங்களில் இதுவரை 2,812 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.