182 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில் 2 தொழில் அதிபர்கள் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்” என்கிறான் பாரதி.

ஆனால், நாம், பெண்களை மதிப்பதே கிடையாது. அவர்களைப் போதைப் பொருளாக நினைத்து காலில் போட்டு மிதிக்கத் தான் செய்கிறோம். அப்படியொரு சம்பவம் தான் மேற்கு வங்கத்தில் தற்போது நடந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு பணம் பறிப்பதாக, பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர், அங்குள்ள காவல் நிலையத்தில், கடந்த நவம்பர் மாதம் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கொல்கத்தா போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், பிரபல ஓட்டல் நிறுவன அதிபர் அனீஷ் லோஹரூகா மற்றும் பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தின் அதிபருமான ஆதித்ய அகர்வால் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அத்துடன், அவர்கள் பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றையும் போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, சுமார் 182 பெண்களை ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2013 ஆம் ஆண்டு முதலே, இதுபோன்று பெண்களை ஆபாசமாக வீடியோ எடுப்பது தெரியவந்தது.

குறிப்பாக, முதலில் பெண்களிடம் நட்பாகப் பழகி, பின்னர் இரட்டை அர்த்த வார்த்தைகளைப் பேசி அவர்களை மயக்கி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து, அவர்களுக்கேத் தெரியாமல் அவர்களது அந்தரங்கத்தை வீடியோ எடுத்து வைத்து வைத்துக்கொண்டு, பின்னர் பணம் கேட்டு மிரட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது.

இதனால், அதிர்ந்துபோன போலீசார், இவர்களுக்கு உடந்தையாக இருந்த கைலாஷ் யாதவ் மற்றும் அவனது கூட்டாளிகள் சிலரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வருடம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 100 க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது. இந்நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,