இந்திய எல்லையில் 5 இந்தியர்களை சீனா ராணுவம் கடத்தி உள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடரும் சீனாவின் அத்துமீறல்களால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து உள்ளது.

இந்திய எல்லையில் அமைந்துள்ள லடாக் மற்றும் டோக்லாம் எல்லைப் பகுதியில் சீனா, தொடர்ந்து எல்லைகளை ஆக்கிரமித்து வருகிறது. இதனால், இந்தியா சார்பிலும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாகவே இந்திய எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதைத் தடுக்கும் விதமாக, இந்தியா - சீனா இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனாலும், ஒரு பக்கம் பேச்சு வார்த்தை நடந்தாலும், மற்றொரு பக்கம் லடாக் எல்லைப் பகுதியில் அத்துமீறி ஊடுருவுவதையே தொடர் கதையாக கொண்டிருக்கிறது.

இப்படியாக, கடந்த காலங்களைப் போல் சீனாவின் அத்து மீறல்களை பார்த்துப் பொறுத்துப் பொறுத்து பார்த்த இந்தியா, தற்போது எல்லையில் எந்த முனையில் யார் ஊடுருவ முயன்றாலும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், லடாக் எல்லையைத் தொடர்ந்து, இமாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில எல்லைகளிலும் சீனா தற்போது தனது அத்து மீறல்களை தொடங்கி உள்ளது.

அத்துடன், சமீபத்தில் இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகளின் சந்திப்பு பகுதியான டோக்லாம் அருகே பிரமாண்டமான கட்டுமான பணிகளை, சீனா அரசு செய்து வருகிறது. இது தொடர்பான செயற்கைக் கோள் படங்களும் இணையத்தில் வெளியானது.

மேலும், வடகிழக்கு மாநிலத்தில் பயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியையும், சீனா வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், மியான்மர் எல்லையில் சீனா தயாரிப்பு ஆயுதங்களும் சமீபத்தில் ஏராளமாகக் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் அத்துமீறு ஊடுருவி உள்ளே நுழைந்த சீன ராணுவம், அந்த பகுதியில் வசித்து வந்த 5 இந்தியர்களை கடத்திச் சென்று உள்ளது.

கடத்தப்பட்ட 5 பேரும், எல்லைப் பகுதியில் உள்ள அப்பர் சுபன்ஶ்ரீ மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அந்த 5 பேரும் அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவம் கடத்திச் சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்திய எல்லையான அருணாசலப் பிரதேசத்தில் புகுந்து சீனா வீரர்கள், இந்தியர்களை கடத்துவது இது 2 வது முறையாகும்.

இதனிடையே, ரஷ்யா சென்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு, அங்கு வந்த சீன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அருணாசலப் பிரதேசத்தில் அத்து மீறி இந்தியர்களை சீனா கடத்தி உள்ளது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.