இந்தியாவில் 18 மாநிலங்களில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகம், பஞ்சாப், கேரளா, குஜராத், டெல்லி என பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு 1.17 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களிடம் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் ( "double mutant variant)கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மாதிரிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து எடுக்கப்படும் மாதிரிகளில் இருந்து மரபணு வரிசை முறைகளை மேற்கொண்டு "double mutant variant"-ஐ கண்டறியப்பட்டுள்ளது.


இந்தியாவில் 736 மாதிரிகளில் பிரிட்டன் வகை கொரோனாவும், 34 பேரிடம் தென் ஆப்பிரிக்க வகை கொரோனாவும், ஒருவரிடம் பிரேசில் வகை கொரோனா வைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.


பழைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முழுமையாக முடியாத நிலையில், புதிய வகை கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மீண்டும் கண்டுபிடிக்க வாய்ப்பு குறைவு என்றும், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசி புதிய வகை கொரோனாவிடமிருந்து காக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.