தைவான நாட்டில் பட்டம் விடும் திருவிழாவின் போது 3 வயது சிறுமி பட்டத்தோடு வானில் பறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பட்டம் விடுவது என்றால், குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். நகரங்களைக் காட்டிலும் கிராமப்புற சிறுவர்களைப் பொருத்தவரை பட்டம் விடாதவர்களே இல்லை என்று சொல்லாமல். அந்த அளவுக்குப் பட்டம் விடும்போது புது உற்சாகம் பிறக்கும்.

உலகின் பல நாடுகளில் பட்டம் விடுவதை, திருவிழாவாகக் கொண்டாடி வருவதுண்டு. அப்படி, பட்டம் விடுவதைத் திருவிழாவாகக் கொண்டாடும் நாடுகள் சிறிய அளவிலான பட்டங்கள் விடுவதில்லை.

ஆள் உயர அளவிலான பட்டங்கள் மற்றும் ராட்சத பட்டங்களையே வானில் பறக்கவிட்டு சந்தோஷ வானில் சிறகடித்துப் பறப்பார்கள்.

அப்படியான பட்டம் விடும் திருவிழா தான், தற்போது தைவான் நாட்டில் கொண்டாடப்பட்டது. தைவானி நாட்டின் நானிலியோ பகுதியில் நடைபெற்ற இந்த  பட்டம் விடும் கொண்டாட்டத்தின் போது, ஒருவர் மிகப் பெரிய அளவிலான ராட்சத பட்டத்தை வானில் பறக்கவிட்டுள்ளார். 

அப்போது, அந்த பட்டத்தின் அருகில் நின்ற 3 வயது சிறுமி ஒருவரின் காலில் அந்த பட்டத்தின் வால் பகுதி சிக்கி உள்ளது. இதனால், பட்டத்தின் வாலோடு சேர்ந்து சிறுமியும் வானை நோக்கி இழுக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகப் பட்டத்தோடு பட்டமாக, அந்த 3 வயது சிறுமியும் வானில் பறந்துள்ளார்.

இதனை சிறிது நேரம் கடந்த பிறகே, கீழே நின்று வேடிக்கை பார்த்தவர்கள் இதனைக் கவனித்துள்ளனர். இதனையடுத்து, அந்த பட்டத்தை இயக்கியவர், சாமர்த்தியமாகச் செயல்பட்டு, அந்த குறிப்பிட்ட பட்டத்தைத் தரையை நோக்கி இழுத்து வந்து, சிறுமி பத்திரமாகத் தரை இறக்கப்பட்டார். சிறுமியும் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டார்.

சிறுமை மீட்ட நிலையில், அவருக்கு ஏதேனும் காயங்கள் இருந்ததா என்று பார்த்துள்ளனர். அப்போது, சிறுமிக்குச் சிறு அளவில் கூட காயங்கள் இல்லை. 

ஆனால், சிறுமி பயத்தில் நடுங்கிப்போன நிலையில், சிறிது நேரம் சிறுமிக்குப் பேச்சே வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அந்த சிறுமி பயந்துபோய் உள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமி அவரின் பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டார்.

இதனிடையே, சிறுமி ஒருவர் பட்டத்தோடு பட்டமாக வானில் பறந்த நிகழ்வை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனையடுத்து, அந்நாட்டு போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் குழந்தைகளை நம் கண்பார்வையிலேயே இருக்க வேண்டும் என்பதையும், குழந்தைகள் மீதான பெற்றோரின் கவனம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதையே, இந்த சம்பவம் காட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.