தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் நடிகர் யோகி பாபு. இவரது பெயர் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர், தனது அயராத உழைப்பினால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறியுள்ளார். 

தினமும் படப்பிடிப்பு என பிஸியாக இருந்த யோகிபாபு, இந்த ஊரடங்கில் வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார். லாக்டவுனில் சோஷியல் மீடியாவிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். யோகிபாபு கைவசம் ட்ரிப், டிக்கிலோனா, கர்ணன் ஆகிய படங்கள் உள்ளது. சில நாட்கள் முன்பு தான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படத்தில் கூட, கதாநாயகன் என விளம்பரப்படுத்துவதாக யோகி பாபு வேதனை தெரிவித்திருந்தார். இதனால் தனது இதர படங்கள் பாதிக்கப்படுவதாகவும், இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். 

தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மொழிகளில் சாட்டிலைட் வழியாகவும் OTT இணையத்தின் மூலமும் யோகி பாபு நடித்த தர்மபிரபு வெளியாகிறது. யோகி பாபு நடித்து சென்ற ஆண்டு தமிழில் வெளியான தர்மபிரபு வித்தியாசமான கதைக் களத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம்.பரவலான வசூல்கள், பார்ப்பவர்கள் மத்தியில் விசில்கள் என்று அள்ளிக் கொண்ட படம். 

எமலோகத்தில், எமன் பதவி காலியாகிறது. அடுத்த எமன் யார்? புதிய எமனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்  நடக்கிறது. வாரிசு அடிப்படையில்  யோகிபாபுவும், அனுபவம் அடிப்படையில் சித்ரகுப்தனாக உள்ள  கருணாகரனும் போட்டியிடுகிறார்கள். இவர்களில் யார் எமன் பதவியைப் பெறப்போகிறார்கள் ? ஆட்சியைப் பிடித்தது மட்டுமல்லாது, தன் தகுதியை எப்படி நிரூபித்துக் கொள்ளப் போகிறார்கள்? என்பதைக் காட்சிகளாக்கி  கலகலப்பாகச் சொல்வதே தர்மபிரபு படத்தின் திரைக்கதை. இப்படம் தெலுங்கு ,மலையாளம், கன்னட மொழிகளில் மொழிமாற்றுப் படமாக உருவாகியுள்ளது. 

இந்தக் கொரோனாவின் லாக்டவுன் காலத்தில் சாட்டிலைட் வழியாகவும் OTT மூலமும் வெளியிடப்படவுள்ளது. தமிழில் தயாரித்த  தயாரிப்பாளர் P ரங்கநாதனின்  ஸ்ரீவாரி பிலிம் நிறுவனம் மூன்று மொழிகளிலும் இம்மொழிமாற்றுப் படங்களைத் தயாரித்துள்ளது. 

தெலுங்கில்  வசனங்கள் , பாடல்களை எழுதி  இருப்பவர் அட்ஷத் .கன்னடத்தில் வசனங்களுடன் பாடல்களையும் உமா எழுதியுள்ளார்.மலையாளத்தில் வசனம் பாடல்களை நிஷாத் எழுதியுள்ளார். எமனாக யோகிபாபு  நடிக்க , எமனின் அப்பாவாக ராஜேந்திர பிரசாத் , சித்திரகுப்தனாக கருணாகரன்,சிவனாக பிரம்மானந்தம் என நடித்திருக்கிறார்கள்.