அரிமா நம்பி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்.அடுத்ததாக நடிகர் சியான் விக்ரம் உடன் இணைந்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர் உருவாக்கிய திரைப்படம் இருமுகன். இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் விக்ரம் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்த அதிரடி ஆக்சன் திரைப்படமாக இருமுகன் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இதையடுத்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நோட்டா திரைப்படத்தை இயக்கி இருந்தார். 

இந்நிலையில் தற்போது இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் எனிமி திரைப்படத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ளனர். ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகிவரும் எனிமி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் S.தமண் இசையமைக்க R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இளம் நடிகை மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S.வினோத் குமார் தயாரித்துள்ளார். பரபரப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பற்றிய முக்கிய தகவல் இன்று வெளியானது. 

விஷால் மற்றும் ஆர்யா நேருக்கு நேர் மோதும் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் எனிமி திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார். 

இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்திற்கு பிறகு நடிகர் விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்திருக்கும் எனிமி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. விரைவில் எனும் திரைப்படத்தின் டீஸர், டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.