தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடம் பிடித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்கும் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்த வகையில் அடுத்ததாக கோமாளி மற்றும் லவ் டுடே படங்களின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிப்புகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் ரசிகர்களோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக நடிகரும் நடன கலைஞருமான ஜாபர் மற்றும் நடிகரும் நடன கலைஞரும் பிக் பாஸ் போட்டியாளருமான அமீர் இருவரும் கலந்து கொண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனோடு உரையாடினார். அப்படி பேசுகையில், இப்போது புதிய இயக்குனர்கள் எல்லாம் வருகிறார்கள் ஒரு திரைப்படம் எடுக்கிறார்கள் அப்போது விமர்சனம் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர்களது நம்பிக்கையை முழுவதுமாக அழித்து விடுகிறார்கள் இப்போது அந்த மாதிரி ஒரு சூழ்நிலை தான் போகிறது..? என அமீர் கேட்டபோது,
“இதற்கெல்லாம் உடைந்து போகக்கூடாது... அவ்வளவுதான். அவர்களுடைய வேலை அதுதான் விமர்சனம் செய்பவர்களுக்கு நிறைய பார்வையாளர்கள் வரவேண்டும் நிறைய லைக்குகள் கிடைக்க வேண்டும் அதற்காக சில இடங்களில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக நான்கு பிட்டுகள் சேர்த்து போடுவார்கள். அது உண்மை கிடையாது அது அவர்களது கருத்து. நமக்கு நம்மைப் பற்றிய ஒரு கருத்து இருக்கும் சில நேரங்களில் சில விமர்சனங்களில் சரியாகவும் சொல்லுவார்கள் அதை நாம் யோசித்திருக்கவே மாட்டோம். அது மாதிரி ஒரு கோணத்தில் இருக்குமா? என நமக்கே தெரியாது. நாம் ஒரு படத்தை இயக்குகிறோம் என்று சொன்னால் நாம் அந்த உலகத்திற்குள் செல்கிறோம். அந்த படத்திற்கான உலகத்தில் இருக்கும் போது நாம் எது செய்தாலும் சரி என இருக்கும். சில நேரங்களில் சில விமர்சகர்கள் சில விமர்சனங்களை கொடுக்கும்போது அது கொஞ்சம் சரியாக இருக்கும். “அட ஆமாம் இதை நாம் யோசிக்கவே இல்லையே!” என்று நமக்கு தோன்றும். அதையும் நாம் எடுத்துக் கொள்வது நல்லது தான். எதற்குமே இங்கே உடைந்து போவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே ஒரு படிப்பினை தான். இப்போது நம்முடைய வீட்டில் ஒரு டிரைவர் ஒரு விஷயம் சொல்கிறார். இப்படி போக வேண்டாம் கொஞ்சம் டிராபிக்காக இருக்கிறது இப்படி போலாம் என்று சொன்னால் நீ டிரைவர் தானே எதற்காக சொல்கிறாய் என்று கேட்காமல்.. அவர் சொல்வதிலும் நல்லது இருக்கலாம். எனவே. நாம் சரியான விஷயங்களை எடுத்துக் கொள்வதை கற்றுக் கொள்ள வேண்டும். இதில் புதிய இயக்குனர்களுக்கும் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. சரியான விதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
என இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு பேட்டி இதோ…