விடாமுயற்சி, கங்குவா படங்களின் கலை இயக்குனர் மிலன் திடீரென காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகம்

விடாமுயற்சி கங்குவா படங்களின் கலை இயக்குனர் மிலன் திடீரென காலமானார்,vidamuyarchi art director milan passed away due to heart attack | Galatta

நடிகர் சூர்யாவின் கங்குவா, நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி வந்த மிலன் திடீரென காலமானார்.  தமிழ் சினிமாவின் முன்னணி கலை இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் கலை இயக்குனர் மிலன் அவர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது தற்போது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய சினிமாவின் முன்னணி கலை இயக்குனர்களில் ஒருவரான சாபுசிரில் அவர்களிடம் சிட்டிசன், தமிழன், ரெட், வில்லன், அந்நியன் உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி கொலை இயக்குனராக பணியாற்றிய மிலன் அவர்கள், கடந்த 2006 ஆம் ஆண்டில் ஆர்யா கதாநாயகனாக நடித்த கலாபக் காதலன் திரைப்படத்தின் மூலம் கலை இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார். தொடர்ந்து 2007 ஆம் ஆண்டில் இயக்குனர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பில்லா திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியிருந்தார். 

தொடர்ந்து அஜித்குமாரின் ஏகன், வீரம், வேதாளம், விவேகம் உள்ளிட்ட படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றிய மிலன் அவர்கள் தளபதி விஜயின் வேட்டைக்காரன், வேலாயுதம் கலை இயக்கம் செய்திருக்கிறார். மேலும் ஆர்யாவின் ஓரம் போ & சிக்கு புக்கு, சரத்குமாரின் வைத்தியஸ்வரன், இயக்குனர் சரண் இயக்கத்தில் வினய் நடித்த மோதி விளையாடு, ஜீவாவின் என்றென்றும் புன்னகை, ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், போகன் எஸ்.ஜேசூர்யாவின் இசை பிரசாந்தின் சாகசம் & ஜானி சீயான் விக்ரமின் சாமி 2 உள்ளிட்ட படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அடுத்ததாக தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திற்கும் மிலன் அவர்கள் தான் கலை இயக்கம் செய்திருக்கிறார். மேலும் சமீபத்தில் தொடங்கப்பட்ட அஜித் குமாரின் 62 ஆவது திரைப்படமான விடாமுயற்சி திரைப்படத்திற்கும் மிலன் அவர்கள் தற்போது கலை இயக்கம் செய்து வந்தார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் இந்த விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் பணியாற்றி வந்த நிலையில், இன்று அக்டோபர் 15ஆம் தேதி காலை திடீரென கலை இயக்குனர் மிலன் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு பட குழுவினர் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மிலன் அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளி வருகின்றன. தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றிய மிலன் அவர்களின் திடீர் மறைவு தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு கலாட்டா குழுமம் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தமிழ்  திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 

'விடாமுயற்சி', 'கங்குவா ' படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பு காரணமாக காலமானார்! பில்லா, வீரம், துணிவு, விவேகம், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.#Milan #RIPMilan #VidaaaMuyarchi #Kanguva #Galatta pic.twitter.com/BPhflYP83a

— Galatta Media (@galattadotcom) October 15, 2023