தமிழ் சுயாதீன இசை கலைஞராக தனக்கே உரித்தான ஸ்டைலில் பல சமூக நல கருத்துக்கள் நிறைந்த குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தைப் பேசும் சிறந்த பாடல்களை வழங்கிவரும் “தெருக்குரல்” அறிவு தமிழ் திரையுலகிலும் பாடகர் மற்றும் பாடலாசிரியராக வலம் வருகிறார்.

காலா, வடசென்னை, சூரரைப்போற்று, மாஸ்டர், மண்டேலா, சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம், அண்ணாத்த, மாநாடு, வலிமை உள்ளிட்ட பல படங்களில் பாடலாசிரியர் மற்றும் பாடகராக சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வரும் “தெருக்குரல்” அறிவு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகி தீ உடன் இணைந்து பணியாற்றிய பாடல் என்ஜாய் என்ஜாமி.

சுயாதீன இசை கலைஞர்களுக்கான தளமாக மாஜா வாயிலாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடலை வெளியிட்டார். கடந்த மார்ச் மாதம் வெளிவந்த என்ஜாய் என்ஜாமி பாடல் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இப்பாடலில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் இந்திய பிரதமர் அவர்கள் முன்னிலையில் என்ஜாய் என்ஜாமி பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அப்போது இப்பாடலின் மிக முக்கிய அங்கமாக விளங்கிய “தெருக்குரல்” அறிவு இல்லாதது பலருக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் இது சார்ந்து பலவிதமான சர்ச்சைகள் கிளம்பின.

இந்நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து மனம் திறந்த “தெருக்குரல்” அறிவு, “என்ஜாய் என்ஜாமி பாடல் நான் இசையமைத்து, எழுதி, பாடிய பாடல் இதற்காக யாரும் எனக்கு எந்த ட்யூனும் கொடுக்கவில்லை, ஒரு வார்த்தை கூட கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேலாக தூக்கமின்றி இதை உருவாக்கி உள்ளேன். கண்டிப்பாக இந்த படைப்பு ஒரு கூட்டு முயற்சி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” தெரிவித்துள்ள அறிவு, “நீங்கள் உறங்கும் பொழுது உங்கள் பொக்கிஷத்தை யாரும் வேண்டுமானாலும் அபகரித்துக் கொள்ளலாம் விழித்திருக்கும்போது ஒன்றும் நடக்காது. ஜெய்பீம்! இறுதியில் உண்மை வெல்லும்.” என குறிப்பிட்டுள்ளார். “தெருக்குரல்” அறிவின் இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

View this post on Instagram

A post shared by Arivu (@therukural)