மலையாளத்தில் வெளிவந்த யாத்திரை தொடரும் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை அபர்ணா பாலமுரளி. 2016-ம் ஆண்டு  மலையாளத்தில் வெளிவந்த மகேசென்ட் பி ரதிகாரம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா, ஒரு முத்திசை காடா, மழையாய் உட்பட மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு ஸ்ரீ கணேஷ்  இயக்கத்தில் வெளியான 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார். அதன் பின் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான சர்வம் தாளமயம் படத்தில் நடித்திருந்தார்.

சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார். 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது. இதில் அபர்ணாவின் பொம்மி பாத்திரத்தை யாராலும் மறக்க இயலாது. 

அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தீதும் நன்றும். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆக்ஷன் ட்ராமா த்ரில்லரான இந்த படத்தை ராசு ரஞ்சித் இயக்கியுள்ளார். சத்யா இசையமைத்துள்ளார். கெவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. புடவை கட்டத்தெரியாமல் தவிக்கும் அபர்ணாவின் நடிப்பு திரை விரும்பிகளை கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் நடிகை லிஜோ மோல் ஜோஸும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் இவரது ரோல் ரசிகர்களை கவர்ந்தது. இவர் நடிப்பில் உருவாகும் இந்த படமும் பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது.