இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இயக்குனர் ஷங்கர் இந்தியன்2 திரைப்படத்தை இயக்கினார். லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் அல்லிராஜா இந்தியன்2 படத்தை தயாரித்தார்.

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து மற்றும் ஊரடங்கு என சில காரணங்களால் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. இதனைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்தில் கவனத்தை செலுத்திய இயக்குனர் ஷங்கர் தமிழில் சூப்பர் ஹிட்டான அந்நியன் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து அந்நியன் படத்தை ரீமேக் செய்கிறார்.

மேலும் தெலுங்கில் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் உடன் இணைந்து புதிய திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் ஷங்கர். RC15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார்.

ராம் சரணின் 15வது திரைப்படமாக தயாராகும் இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய தகவல் இன்று வெளியானது.  தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக தமன்.S சங்கரின் படத்திற்கு இசையமைக்கிறார். 

முதல்முறையாக ஷங்கரின் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார் தமன்.S. பாய்ஸ் திரைப்படத்தில் ஷங்கரின் இயக்கத்தில் நடித்திருந்த தமன் தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஷங்கருடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.