மலையாளத்தில் நடிகர் மம்முட்டி கதாநாயகனாக நடித்த கூடிவிடே திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ரஹ்மான் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புதுப்புது அர்த்தங்கள் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த புரியாத புதிர் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் ரகுமான் தொடர்ந்து கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். 

கடைசியாக இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அடுத்ததாக துப்பறிவாளன் 2 மற்றும் இயக்குனர் மணிரத்தினத்தின் பிரம்மாண்ட படைப்பாக தயாராகிவரும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஹ்மானின் தந்தை முகமது அப்துல் ரகுமான் - தாயார் சாவித்திரி நடிகர் ரஹ்மானுக்கு Dr.ஷமீம் என்ற ஒரு தங்கையும் உண்டு. இந்நிலையில் தற்போது நடிகர் ரகுமானின் தாயார் சாவித்திரி உயிரிழந்துள்ளார். தாயார் சாவித்திரியின் வயது 84. பெங்களூருவில் இன்று மதியம் 3:30 மணி அளவில் காலமானார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

தாயாரின் இறுதி சடங்குகள் நாளை வியாழக்கிழமை கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர்-இல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஹ்மானின் தாயார் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.