"ரோலக்ஸ்"க்கு தனி படம் பின் "இரும்புக்கை மாயாவி"- சூர்யா - லோகேஷ் கனகராஜின் அதிரடி திட்டம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ரோலக்ஸ் இரும்பு கை மாயாவி என சூர்யா - லோகேஷ் கனகராஜின் அதிரடி திட்டம்,suriya shared about rolex and irumbu kai maayavi with lokesh kanagaraj | Galatta

இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் இணைவது குறித்து நடிகர் சூர்யா தற்போது பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் நட்சத்திர நாயகராகவும் ஜொலிக்கும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா எனும் பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். பக்கா பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் இந்த கங்குவா திரைப்படத்தின் GLIMPSE வீடியோ சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நடிகர் சூர்யாவின் மிரட்டலான லுக்கும், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. முன்னதாக சூரரைப் போற்று படத்தில் ஹிந்தி ரீமேக்காக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்து வரும் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் சூர்யா, மீண்டும் இயக்குனர் சுதா கொங்காராவுடன் மற்றொரு புதிய படத்தில் இணைய இருப்பதாக தெரிகிறது.

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுடன் முதன்முறை கைகோர்க்கும் சூர்யா, விடுதலை 2 திரைப்படத்தை வெற்றிமாறன் நிறைவு செய்த பிறகு தொடங்கும் வாடிவாசல் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி மிரட்டலான படமாக தயாராகும் இந்த வாடிவாசல் திரைப்படத்திற்காக பிரத்தியேகமாக காளை ஒன்றை அனிமேட்ரானிக்ஸ் முறையில் பட குழுவினர் ரோபோவாக உருவாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் சூர்யா கைகோர்க்க இருக்கும் செய்தி தற்போது ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜயின் லியோ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் லியோ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் எனும் மிரட்டலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதிலிருந்து LCU என்ற லோகேஷ் கனகராஜின் அந்த யுனிவர்ஸுக்குள் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இன்னும் பெரிய இடம் இருப்பதாகவும் அது வரும் படங்களில் ரசிகர்களை மகிழ்விக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஏற்கனவே நடிகர் சூர்யா அவர்களுக்காக இரும்புக்கை மாயாவி எனும் கதையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொல்லி இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் அந்த படம் நடைபெறாமல் போனது. இந்த நிலையில் தற்போது தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் சூர்யா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்தடுத்து இணைவது குறித்து பேசி இருக்கிறார். அப்படி பேசுகையில், லோகேஷ் கனகராஜ் தனக்கு ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முன் நிறுத்தி தனி படத்திற்கான ஒரு கதையை சொல்லி இருப்பதாகவும் அது தனக்கு மிகவும் பிடித்திருப்பதால் ஓகே சொல்லி இருப்பதாகவும் விரைவில் ரோலக்ஸ் படம் உருவாகும் என்றும் அதனை தொடர்ந்து இரும்பு கை மாயாவி திரைப்படத்திலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்திருப்பது தற்போது சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த இதர அதிகாரப்பூர்வ தகவல்கள் அனைத்தும் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.