சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் அண்ணாத்த. தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ள இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகைகள் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் அண்ணாத்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

பரபரப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் தன் பகுதி காட்சிகளை முடித்துவிட்டு மருத்துவ பரிசோதனைக்காகவும் ஓய்வெடுப்பதற்காகவும் அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக அண்ணாத்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

மேலும் அண்ணாத்த தீபாவளிக்கு ரெடியா என  ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பதிப்பித்துள்ளனர் பதிவிட்டுள்ளனர்.விரைவில் அண்ணாத்த திரைப்படத்தின் போஸ்டர், டீசர், டிரைலர், பாடல்கள் என அடுத்தடுத்த அப்டேட்களால் சோசியல் மீடியா அதிரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீபாவளி அண்ணாத்த தீபாவளி தான் போட்றா வெடிய...