தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் கெரியரை துவங்கிய சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டிராஜின் மெரினா திரைப்படம் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார். ஹீரோவாக கோலிவுட்டுக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர் ஆவார். அவர் நடிகர் மட்டும் அல்ல ஒரு தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகரும் கூட. வளர்ந்துவிட்டாலும் தான் எங்கிருந்து வந்தோம் என்பதை அவர் இன்னும் மறக்கவில்லை.

தன் படங்களில் சின்னத்திரையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு சென்றால் முன்னணி நடிகராக முடியாது என்கிற எண்ணத்தை மாற்றிய சிவகார்த்திகேயன் பலருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.

அந்த வகையில், மாநில அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுவிட்டு, தாயிடம் ஆசி பெற்று அதனையும் நெகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்கப் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், எங்களை கரைசேர்த்த தாய்க்கு இந்த கலைமாமணி விருது சமர்ப்பணம் என ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். மேலும், தாயின் காலில் விழுந்து வணங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பெரும்பாலான திரைவிழா மேடைகளில் தனது தந்தையை நினைவுகூர்வது வழக்கம். அத்துடன் தன்னை தனது தாய் அரும்பாடுபட்டு வளர்த்ததையும் பெருமிதத்துடன் சொல்வார்.

முன்னதாக, நேற்று பிப்.20-ம் தேதி மாலை 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் இயல், இசை, நாட்டியம், நாடகம், சினிமா, இசை நாடகம், நாட்டுப்புறக் கலைகள், சின்னத்திரை உள்ளிட்ட கலைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு தமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத்துறை சார்பாக ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, எடிட்டர் ஆண்டனி, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இவர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.

டாக்டர் படத்தை முடித்த சிவகார்த்திகேயன், டான் படத்தில் நடித்து வருகிறார். புதுமுகம் சிபி சக்ரவர்த்தி இயக்கும் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். டான் படத்தை லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்கிறார். கல்லூரி பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தன் உடல் எடையை சற்று குறைத்திருக்கிறார்.