இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் சிலம்பரசன் TR நடிப்பில் கடந்த மார்ச் 30 ம் தேதி வெளியான ‘பத்து தல’. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் இயக்குனர் ஒபெலி N கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிலம்பரசன் உடன் இணைந்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருப்பார். மேலும் படத்தில் பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், ரெட்டின் கிங்ஸ்லி, டிஜே அருணாசலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருப்பார். அட்டகாசமான ஆக்ஷன் கதைகளத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இன்னும் சில பகுதிகளில் பத்து தல திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஒபெலி N kகிருஷ்ணா அவர்களுக்கு பத்து தல திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் தமிழில் ராமன் தேடிய சீதை, சாருலதா, ஹே சினாமிக்க மற்றும் இந்தியில் ‘அலோன்’ அகிய படங்களை தயாரித்துள்ள குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் என்ற பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தை இயக்க ஒபெலி கிருஷ்ணா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த அறிவிப்பினை பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பில்,
இந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் பத்து தல வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ஒபெலி N கிருஷ்ணன் அவரது புதிய திரைப்படத்தை இயக்குவதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கின்றது. இது குறித்து இயக்குனர் கிருஷ்ணா, “ குளோபல் ஒன் ஸ்டுடியோ உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். தயாரிப்பாளர் ரமேஷ் சினிமா மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் தொடர்ந்து நல்ல கருத்துக்கள் உள்ள திரைப்படங்களை தயாரிக்க விரும்புவர். அவருடன் ஒரு தனித்துவமான திரைப்படத்திற்காக இணைவது மகிழ்ச்சி.. இந்த கூட்டணி நிச்சயம் பார்வையாளர்களுக்கு நல்ல திரைப்படத்தை வழங்கும்” என்றார்.
தொடர்ந்து தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி, இந்த திரைப்படம் குறித்து, “உலகளாவிய மக்களின் ரசனைக்கு மதிப்பளித்து சிறந்த படங்களை கொடுக்கும் ஈடு இணையற்ற பண்பை கொண்ட திறமையான இயக்குனர் கிருஷ்ணாவுடன் எங்கள் தயாரிப்பு நிறுவனம் கைகொர்த்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன். பார்வையாளர்களுக்கு புதிய பரிணாம அனுபவத்தையும் கொடுத்து அகில இந்திய திரைப்படமாக உருவாகும். படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் “ என்று குறிப்பிட்டுள்னர்.
Best wishes to @nameis_krishna 😀👍@globalonestudio pic.twitter.com/9h3MWsTpCB
— A.R.Rahman (@arrahman) May 5, 2023
முன்னதாக இயக்குனர் ஒபெலி கிருஷ்ணா பத்து தல திரைப்படத்தின் அடுத்த பாகம் குறித்து பல இடங்களில் பேசியுள்ளார். அப்படம் மிக பெரிய அளவில் இருக்கும் என்றும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி இயக்குனர் கிருஷ்ணா வின் அடுத்த படம் பத்து தல படத்தின் இரண்டாவது பாகமாக இருக்கலாம் என்றும் மீண்டும் சிம்பு, ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி அமையும் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களுடன் இந்த அறிவிப்பை வாழ்த்தி அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.