மும்பை அணிக்கு எதிரானப் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபாச வெற்றி பெற்று அசத்தி உள்ளது.

ஐபிஎல் போட்டியின் 39 வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதியது. 

இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி - தேவ்தத் படிக்கல் களமிறங்கிய நிலையில், படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மறுபுறம் கோலி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார்.

2 வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலியுடன் இணைந்த விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத், மும்பை பவுலர்களை தண்ணீர் காட்டினார். அவர்கள் இருவரும் சேர்ந்து சிக்ஸர்கள், பவுண்டரிகள் என்று விளாச தள்ளினர். இதனால், ரன்கள் ராக்கெட் வேகத்தில் எகிறத் தொடங்கியது. 

பவர்பிளே முடிவில் பெங்களூரு அணி 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. அப்போது, ராகுல் சாஹர் ஓவரில் பரத் 32 ரன்களில் அவுட்டாக, மூன்றாவது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் களமிறங்கினார். கடந்த சில போட்டிகளில் தடுமாறிய மேக்ஸ்வெல், இன்று சில பல சிக்ஸர்களை பறக்கவிட ரன்கள் குறையாமல் வந்துகொண்டே இருந்தது. 

சிறப்பாக ஆடிய விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

மேக்ஸ்வெல் 33 பந்தில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். பெங்களூரு 18 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. பிறகு, மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து பும்ரா ஓவரில் கேட்ச் ஆகி அவுட்டானார். இப்படியாக, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டிகாக் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் 24 ரன்களில் குவிண்டன் டிகாக் கேட்ச் ஆகி அவுட்டானார்.

இதன் பிறகு மும்பை அணிக்கு மளமளவென விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது. இஷான் கிஷன் 9 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும், குருனால் பாண்டியா 8 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

மும்பை அணி வெற்றிக்கு 24 பந்துகளில் 51 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது களத்தில் ஹர்திக், பொல்லார்ட் என கையில் 5 விக்கெட்டுகள் இருந்தன.

அதே நேரத்தில், ஹர்ஷத் பட்டேல் தான் வீசிய 17 வது ஓவர் தான் போட்டியின் போக்கையே மாற்றியது. அதாவது, ஹர்திக் பாண்டியா 3 ரன்களிலும், பொல்லார்ட் 7 ரன்களிலும், ராகுல் சாஹர் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்ஷத் பட்டேல் அசத்தினார். 

இறுதியாக 18.1 ஓவர்களில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

குறிப்பாக, விராட் கோலி, டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.