இசைஞானி இளையராஜா இசையில் நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்து விரைவில் வெளிவர இருக்கும் கிளாப் திரைப்படத்தின் கதாநாயகி ஆக்காங்ஷா சிங். பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளியான முன்னணி மெகா தொடர்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 

தொடர்ந்து நடிகை ஆக்காங்ஷா சிங் பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியான மல்லி ராவ் படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நடிகை ஆக்காங்ஷா சிங் அடுத்து நானி மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த தேவதாஸ் திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

அடுத்ததாக கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்த பயில்வான் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது  நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்து தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான கிளாப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகிறார். கிளாப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ஆக்காங்ஷா சிங்கின் தந்தை க்யான் பிரகாஷ் சிங் நேற்று உயிரிழந்துள்ளார். தனது தந்தையின் மறைவு குறித்து நடிகை ஆக்காங்ஷா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பதிவிட்டுள்ளார். நடிகை ஆக்காங்ஷா சிங்கின் தந்தை மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.